வியாபாரத்திலும், காதலிலும் பெற்ற தோல்விகளால் மனம் உடைந்து கிடைக்கிறார் பரத். சாவைத் தேடித் போகும் வழியில் துறுதுறு பெண்ணான தமன்னாவை சந்திக்கிறார். அவர்களுக்குள் இனம் புரியாத ஒரு நட்பு உருவாகிறது. தமன்னாவுடன் தேனியில் இருக்கும் அவர் வீட்டுக்குப் போகிறார். அங்கே தமன்னாவுக்கும் அவருடைய மாமனான சந்தானத்துக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஏற்கனவே தமன்னா முன்னாவைக் காதலிப்பதால் பரத்துடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார்.
ஊட்டியில் தமன்னாவை விட்டு சென்னை திரும்பும் பரத் வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கையோடு போராடி முன்னேறுகிறார்.ஆனால் தமன்னாவின் வீட்டார் பரத் தான் தமன்னாவை ஏதோ செய்து விட்டதாக அவரை மிரட்டுகிறார்கள். காதலனைத் தேடி ஊட்டிக்குப் போன தமன்னா என்ன ஆனார்? அவருடைய காதல் என்ன ஆனது? கடைசியில் அவர் யாரைக் கைபிடிக்கிறார்? இதுதான் "கண்டேன் காதலை".
இது முழுக்க முழுக்க தமன்னாவுக்கான படம். அழகாக இருக்கிறார். ஹிந்தியில் கரீனா செய்ததை அப்படியே செய்ய முயற்சிக்கிறார். முதல் பாதியில் அடாவடியாகவும், இரண்டாம் பாதியில் அமைதியாகவும் மனதை அள்ளுகிறார். ஆனால் அவருடைய குழந்தைத்தனமான பேச்சு ஒரு சிலருக்கு எரிச்சலைக் கிளப்பக் கூடும். ஷாகிதின் பாத்திரத்துக்கு பரத் அவ்வளவு நன்றாகப் பொருந்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஒரு சில இடங்களில் அவர் பேசுவதும் நாடகத்தனமாக இருக்கிறது.
படத்தில் கைதட்டல்களை அள்ளுபவர் தமன்னாவின் மாமனாக வரும் சந்தானம். கிராமத்து மனிதராக பட்டாசு கிளப்புகிறார். சிங்கமுத்துவோடு சேர்ந்து கொண்டு அவர் அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம். ரவிச்சந்திரன், நிழல்கள் ரவி, அழகம்பெருமாள், மனோபாலா, சுதா, முன்னா, ஜீவா என்று ஒரு பெரிய கூட்டமே படத்தில் இருக்கிறது. எல்லோருமே அவரவருடைய பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஹிந்தி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் பெரிதும் துணைபுரிந்தன. ஆனால் இங்கே வித்யாசாகர் சொதப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு எந்தப் பாடல்களுமே இல்லை. "காற்று புதிதாய்", "ஓடோடிப் போறேன்" ஆகிய இரண்டு பாடல்கள் மட்டுமே தேறுகின்றன. பாடல்களிலும், ஊட்டிக் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா நன்றாகச் செய்திருக்கிறார். ரேம்போனின் கலை இயக்கம் படத்துக்கான ரிச் லுக்குக்கு பெரிதும் உதவுகிறது.
இம்தியாஸ் அலியின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் கண்ணன். தமிழ்ச் சூழலுக்கு இந்தக் கதை சரிவருமா எனத் தெரியவில்லை. தமிழுக்குத் தேவையான மாற்றங்கள் செய்வதிலும், நகைச்சுவைக் காட்சிகளை படமாக்குவதிலும் இயக்குனர் காட்டிய கவனத்தை கொஞ்சம் திரைக்கதையை விறுவிறுப்பாக்குவதில் காட்டி இருந்தால் இன்னும் படம் நன்றாக வந்திருக்கும். இரண்டாம் பாதி ரொம்பவே நீளம். போதாக்குறைக்கு அடிக்கடி வரும் பாட்டுகள் வேறு படத்தின் வேகத்தை குறைக்கின்றன. என்றாலும் எந்த விதமான இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமோ இல்லாமல் ஒரு நீட்டான காதல கதையை படமாக்கி இருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
கண்டேன் காதலை - கண்ணியம்